கிருஷ்ணகிரி, செப்.23: கிருஷ்ணகிரியில் வரும் 30ம் தேதிக்குள் கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, எம்ஐஎம்ஏஎஸ் போர்ட்டலில் பதிவு செய்யவிட்டால், நடைச்சீட்டு வழங்க இயலாது என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில்(ஏஐஎஸ் 140) ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அவற்றை எம்ஐஎம்ஏஎஸ் (கனிம மேலாண்மை அமைப்பு) போர்ட்டலில் பதிவு செய்ய, கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், நாளது தேதி வரையில் சுமார் 6.75 சதவீத வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, எம்ஐஎம்ஏஎஸ் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வரும் 30ம் தேதிக்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, எம்ஐஎம்ஏஎஸ் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் கனிமங்கள் எடுத்து செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வரும் 30ம் தேதிக்குள் தங்களது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


