போச்சம்பள்ளி, அக்.22: போச்சம்பள்ளியில் இருந்து செல்லம்பட்டி வழியாக காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேலம்பட்டி, பர்கூருக்கும், அதேபோல் அகரம் பகுதியில் இருந்து தினமும் தனியார் மற்றும் அரசு பஸ்சுகள் சென்று வருகிறது. இப்பகுதியில் இருந்து போச்சம்பள்ளி தர்மபுரி, காவேரிப்பட்டணம், காரிமங்கலம், திருப்பத்துர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு வேலைகளுக்கு செல்வோர் அகரம், செல்லம்பட்டிக்கு வந்துதான் செல்ல வேண்டும்.
இதனால் அப்பகுதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் மற்றும் வாகன போக்குவரத்து காணப்படும். பணிக்கு செல்வோர் இரவு நேரங்களில் சென்று வருவதால் அகரம் மற்றும் செல்லம்பட்டி பகுதிகளில் 2020-21ம் ஆண்டு எல்.இ.டி. மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் அச்சமின்றி சென்று வந்தனர். ஆனால் பல மாதங்களாக அகரம் மற்றும் செல்லம்பட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரியாததால், அப்பகுதி இருளில் மூழ்கியது.
இதனால் இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலையில், மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து செல்லம்பட்டி மற்றும் அகரம் பகுதிகளில் எரியாத மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


