கிருஷ்ணகிரி, அக்.22: கிருஷ்ணகிரியில் காவல் துறை சார்பில், வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நினைவு ஸ்துபிக்கு கலெக்டர், எஸ்.பி மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில், நேற்று வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்பி அனிதா ஆகியோர் தலைமை வகித்து, வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா, ஏடிஎஸ்பி நமச்சிவாயம், முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் கர்னல் அருள்மொழி(ஓய்வு) மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், தலைமை காவலர்கள், ஊர்க்காவல் படையினர், ஆயுதப்படை காவலர்கள், முன்னாள் காவல் துறையினர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், 20 போலீசார் மூன்று சுற்றாக 60 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.


