ராயக்கோட்டை, ஆக.21: ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டு சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. நாளடைவில் போதிய பராமரிப்பின்மையால், பஸ் ஸ்டாண்டு தரை முழுவதும் உள்ள தார் தளம் அழிந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள், குழிகளில் இறங்கி ஏறுவதால், டயர்கள் அடிபடுவதுடன் பஸ்களும் சேமாகிறது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி மாலை பெய்த சாதாரண மழைக்கே, பஸ் ஸ்டாண்டு நுழைவு வாயிலில் இருந்து பஸ் ஸ்டாண்டில் உள்ள குழிகளில் மழை நீர் நிரம்பியது. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



