கெலவரப்பள்ளி அணை நீரை ஓசூர் ஏரிகளில் நிரப்ப வேண்டும் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஓசூர், செப்.18: ஓசூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஜெயசந்திரன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். இதில் ஓசூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, உடனடியாக சீரமைக்க வேண்டும். சொத்துவரி உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும். மாநகராட்சியில் ஆயிரம் பேர் அமரக்கூடிய மீட்டிங் ஹால் கட்டவேண்டும். ஓசூரிலிருந்து கக்கனூர் வழியாக பாகலூர் செல்லும் பஸ்களை சர்ஜாபுரம் வரை நீட்டிக்க வேண்டும். பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். ஓசூர், தளி, அஞ்செட்டி, சூளகிரி ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து ஓசூரை தனி மாவட்டமாக அறிக்க வேண்டும். கோடைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, கெலவரப்பள்ளி அணையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, ஓசூர் பகுதியில் உள்ள நான்கு ஏரிகளில் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.