ஓசூர், ஆக.14: உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, காவேரி மருத்துவமனை சார்பில் ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், `உறுப்பு தானம் என்பது உயிர் கொடுக்கும் உயர்ந்த செயலாகும்.
ஒருவரின் உறுப்பு தானம் மூலம், பல உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே, பொதுமக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்,’ என்றார். மேலும், பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காவேரி மருத்துவமனையின் முயற்சிகளை பாராட்டினார். நிகழ்ச்சியில், ஓசூர் சப் கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, , காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் அரவிந்தன், மூத்த பொதுமேலாளர் ஜோஷ் வர்க்கிஸ் ஜாய், துணை மருத்துவ நிர்வாகி ஸ்ரீராமஜெயம் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.




