ஓசூர், ஆக.14: கர்நாடகாவில் மேகதாது அணை திட்டத்தை, கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு மற்றும் அமைப்புகளை கண்டித்தும், கர்நாடகாவில் சில கூட்டமைப்புகள் சார்பில் நேற்று ‘கர்நாடக பந்த்’ (முழு அடைப்பு போராட்டம்) நடத்தப்பட்டது. இந்த பந்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசு பேருந்துகள், கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு வரும் அனைத்து கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் கார், சரக்கு லாரிகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் இயங்கின. கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த எல்லையோர ஆர்ப்பாட்டம் மற்றும் பந்த் அறிவிப்பால் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால், கர்நாடக மற்றும் தமிழக பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



