கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ்(30). தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (35) உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மஞ்சுநாத் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம், விவசாய தோட்டத்தில் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த கார், திடீரென மஞ்சுநாத் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயமடைந்த மஞ்சுநாத்தை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், மஞ்சுநாத் மீது மோதிய கார் மற்றும் மர்ம நபர்கள் குறித்து, அப்பகுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தி உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அந்த காரின் பதிவெண்ணை வைத்து, மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
