வேப்பனஹள்ளி, நவ.13: வேப்பனஹள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள 3 யானைகள் சுற்றித்திரிவதால், விவசாயிகள் இரவு நேரத்தில் பயிர்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், நாரலப்பள்ளி மற்றும் மகராஜகடை வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள், கடந்த சில நாட்களாக வேப்பனஹள்ளி அடுத்துள்ள கர்நாடக மாநில எல்லையோர கிராமங்களான எப்ரி, சிகரலப்பள்ளி, கொட்டாயூர், கொங்கனப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து, விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்துள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன. பயிர்களை காவல் காப்பதற்காக இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், யானைகளால் தாக்கப்பட்ட உயிரிழந்தும் வருகின்றனர்.
இதையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானைகள் நடமாட்டத்தை அறிந்து, அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இரவு நேரங்களில் போன் செய்து, யானைகள் தற்போது எந்த பகுதியில் சுற்றித்திரிகின்றன என்ற தகவலை தெரிவித்து, யானைகள் சுற்றித் திரிவதால் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை, இரவு நேரங்களில் விவசாயிகள் யாரும், பயிர்களுக்கு காவல் காக்க விளைநிலங்களுக்கு செல்ல வேண்டாம். தவிர வனப்பகுதி ஒட்டிய பாதைகளை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
