போச்சம்பள்ளி, ஆக.13: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் மற்றும் நாகனூர், பூசாரிக்கொட்டாய், மோட்டூர், புளியாண்டப்பட்டி, போக்கம்பட்டி, களர்பதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 20 மின் மோட்டார்களும், 100க்கும் மேற்பட்ட கிணறுகளில் உள்ள மின் மோட்டார் கேபிள் ஒயர்களும் திருடு போய் உள்ளன. மின்மோட்டார் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், `திருடு போன விவசாய மின் மோட்டார்கள், கேபிள் ஒயர்களை விரைவில் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் பொருட்களை பாதுகாக்கும் வகையில், முக்கிய வீதிகளிலும், வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பாதுகாத்து, காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என்றனர்.



