கிருஷ்ணகிரி, டிச.9:கிருஷ்ணகிரி குடியிருப்பு பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சி 32வது வார்டு, சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு சாலையோரம் போதிய இடமிருக்கும் நிலையில் குடியிருப்பு வீடுகளின் அருகில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டுமனைகளின் குறுக்கே உயர்மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. இது குறித்து புகாரளித்தும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் இந்த மின்கம்பிகள் மாற்றப்படவில்லை. இப்பகுதியில் குடியிருப்புகள் வராத காலத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது, வீடுகள் அதிகரித்த நிலையில், மின்கம்பிகள் டிரான்ஸ்பார்மரை இழுத்து, சாய்ந்தபடி அபாயகரமான நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகம் விளையாடும் இப்பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும். சாலையோரம் செல்லும் வகையில் மின்கம்பி பாதையை மாற்றி அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


