என்.ஹெச்.,ல் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை
ஓசூர், ஆக.6: தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியில் தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, தமிழக கர்நாடக எல்லை பகுதியான ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வட்டார போக்கு வரத்து அலுவலகம், காவல் துறை சோதனை சாவடி உள்ளிட்டவை இயங்கி வருகிறது. இங்கு தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. மேலும், இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கர்நாடக மாநிலம், வடமாநிலங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இரவு நேரங்களில் மின்விளக்குள் இல்லாததால், பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது, விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.