Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போட்டி தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 3: கிருஷ்ணகிரியில் இன்று(3ம் தேதி) முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட நிரலின்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு மார்ச் மாதம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித்தகுதி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட போட்டித் தேர்வுக்கு தயாராகும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று(3ம் தேதி) முதல் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும், இங்கு பள்ளிப் பாடப்புத்தகங்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச இணையதள வசதி உள்ளிட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் விவரங்களுடன், அலுவலகத்திற்கு நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 04343 291983 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.