தேன்கனிக்கோட்டை, அக்.2: தேன்கனிக்கோட்டையில், பலத்த காற்றுக்கு சாமந்தி, வாழை தோட்டங்கள் சேதம் அடைந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், நேற்று முன்தினம் மாலை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதில், குறிப்பாக தேர்பேட்டை, மாரசந்திரம் பகுதியில் ஆலங்கட்டியுடன் பலத்த சூறை காற்று வீசி மழை பெய்தது. இதில் தென்னை மரங்கள், வேங்கை மரங்கள் முறிந்து விழுந்தன.
தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான சாமந்தி தோட்டம், முட்டைகோஸ் தோட்டம், ஆஸ்டல் பூ தோட்டம், மாடுகளுக்கு வளர்த்திருந்த புல் தோட்டம் மழைக்கு சாய்ந்து சேதமடைந்தது. மேலும், அருகில் உள்ள தோட்டங்களில் வழை மரங்கள் முறிந்து சாய்தன. இதனால் விவசாயிகளுக்கு லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு, வேளாண்மை துறையினர் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


