Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஜவளகிரி, தாரவேந்திரம் பஞ்சாயத்துகளில் யானைகள் நுழைவதை தடுக்க மின்கம்பி வேலி அமைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 26: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி மற்றும் தாரவேந்திரம் பஞ்சாயத்துகளில் யானைகள் நுழைவதை தடுக்க மின்கம்பி வேலி அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: குள்ளம்பட்டி ஊராட்சியில், இயற்கை சீற்றங்களால் 12 கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாய நிலங்களில் சேதமான பயிர்கள், மரங்கள், வீடு சேதங்கள் கணக்கெடுத்து பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும்.

மா மகசூல் குறைந்தும், விலையின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவன புல் நறுக்கும் கருவி இயந்திரமாக வழங்காமல், கைகள் மூலம் நறுக்கும் கருவி வழங்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தோட்டக்கலைத் துறையின் மூலம் ரோஜா செடிகள், தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். துடுக்கனஹள்ளி, சின்னகாவாப்பட்டி, முருக்கமரத்துக்கானை கால்வாய்களை இணைத்து பென்னாங்கான்கொட்டாயில் ஏரி அமைக்க வேண்டும். கம்புகாலப்பட்டியில் மாட்டிற்கு உன்னி தாக்குதல் அதிகமாக இருந்தது. கால்நடை ஆம்புலன்ஸ் தகவல் அளித்தும் வரவில்லை.

இதனால் மாடு 3 நாட்களில் இறந்து விட்டது. தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலைகளின் ரசாயன நீர், கழிவுநீர் கலந்து நுரையாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனை தடுக்க வேண்டும். ஜவளகிரி, தாரவேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க மின்கம்பி வேலிகள் மற்றும் சாலைகள் அமைத்து தர வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்து கலெக்டர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பேசியதாவது: மா சீசன் முடியும் நிலை உள்ளது. உடனடியாக இது குறித்து கணக்கெடுப்பு நடத்தி, விபரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர் சேதத்திற்கு கடந்த 7 மாதங்களாக நிதி வரவில்லை, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இழப்பீடு பெற்று, விரைந்து வழங்கப்படும்.

மாடுகளுக்கு உன்னி தாக்குதல் குறித்து விவசாயிகள் தகவல் அளித்தும், ஏன் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து கால்நடைத்துறையினர் உரிய விளக்கத்தை அறிக்கையாக அளிக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் நீரில், 800 மில்லியன் லிட்டர் அளவிற்கு மட்டுமே சுத்திகரிக்க கர்நாடகாவில் இயந்திரங்கள் உள்ளன. ஆனால், தென்பெண்ணையாற்றில் நாள் ஒன்றுக்கு 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் வருவதால், சுத்திகரிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் தண்ணீரை ஆய்வு செய்து வருகிறோம்.

ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், விரைவில் தீர்வு கிடைக்கும். மாவட்டம் முழுவதும் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, இன்னும் 94 கி.மீ, அளவில்தான் மின்கம்பி வேலி அமைக்க வேண்டும். ஒரு கிமீ மின்வேலி அமைக்க ரூ.50 லட்சம் செலவு ஏற்படுகிறது. அதன்படி ரூ.47 கோடி நிதி தேவை. கடந்தாண்டு ரூ.7 கோடி மட்டுமே நிதி கிடைத்தது. தற்போது கூடுதல் நிதி கேட்டுள்ளோம். வந்தவுடன் பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.