Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் தயாரிக்க ஏரிகளில் வண்டல், களிமண் இலவசமாக எடுக்கலாம்

கிருஷ்ணகிரி, மே 26: விவசாய பயன்பாட்டிற்கு, மண்பாண்டம் தயாரிக்க மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் வண்டல், களிமண் இலவசமாக எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகளில் இருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகிய கனிமங்களை விவசாய பயன்பாட்டிற்காகவும், மண்பாண்டம் தயாரிப்பதற்காகவும் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்குவது தொடர்பான விண்ணப்பங்களை, இணைய வழியில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1039 ஏரிகளின் பட்டியல்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் 197 ஏரிகள், பர்கூர் தாலுகாவில் 154, போச்சம்பள்ளி தாலுகாவில் 96, ஊத்தங்கரை தாலுகாவில் 144, சூளகிரி தாலுகாவில் 104, ஓசூர் தாலுகாவில் 160, தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 169, அஞ்செட்டி தாலுகாவில் 15 ஏரிகள் என மாவட்ட சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலவசமாக வண்டல்மண், களிமண் உரிய வழிமுறை படி வழங்கப்படுகிறது.

அதன்படி, விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள் என்ற அளவிலும், புஞ்சை நிலத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர்கள் லோடுகள் என்ற அளவிலும் மண்பாண்டங்கள் தயாரிக்க 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் அளவில் வழங்கப்படுகிறது. கட்டணமில்லாமல் விவசாய மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ள மனு செய்யலாம். மனு கொடுப்பவரின் வசிப்பிடம் அல்லது வேளாண்மை நிலம் உள்ள கிராமம் மற்றும் வண்டல் மண், களிமண், தூவாரி எடுத்து செல்ல வேண்டிய கண்மாய், ஏரி, குளம் ஆகியவை அதே கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராம எல்லையில் இருக்க வேண்டும்.

மேலும், விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்று கொள்ள விண்ணப்பிக்கும் நபர், விவசாய நிலம் உள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளராக இருந்தால், கிராம நிர்வாக அலுவலர் அதனை உறுதி செய்ய வேண்டும். நிலத்தின் வகை, குத்தகை உரிமம் பெற்று விவசாய பணி செய்தால் அதன் விவரம், வாகன பதிவு எண், அனுமதி கோரும் வண்டல், களிமண் அளவு ஆகியவற்றுடன் tnesevai.tn.gov.in இணையதளம் வாயிலாக வருவாய் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். சம்பந்தப்பட்ட நீர் நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல், களிமண் இலவசமாக எடுத்து கொள்ளலாம். மேலும் விவரங்களுககு தாசில்தார்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.