Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் கடும் அவதி

போச்சம்பள்ளி, ஜூலை 20: போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில், ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் பிரதான போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது. போச்சம்பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி சந்தூர், அரசம்பட்டி, பாரூர், வேலம்பட்டி, அனந்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும், போச்சம்பள்ளி பஸ் நிலையத்திற்கு வந்து தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், பாண்டிசேரி உள்ளிட்ட வெளி இடங்களுக்கு செல்கிறார்கள். ஞாயிறுதோறும் நடைபெறும் சந்தை களை கட்டும். இந்நிலையில், வியாபாரிகள் சந்தையில் கடை வைக்காமல், பஸ் ஸ்டாண்டிற்குள் கடை போடுவது வாடிக்கையாக உள்ளது. பயணிகளுக்கான நடைமேடை முழுவதுமாக ஆக்கிரமித்து கடை போட்டு வருகிறார்கள்.

பஸ்கள் நிறுத்த வேண்டிய இடத்தில் தள்ளுவண்டிகள், சரக்கு வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதும், டூவீலர்களை விட்டு செல்வதுமாக உள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும், சமயங்களில் பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். பஸ் ஸ்டாண்டிற்குள் இருந்து பஸ்சை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக டிரைவர்கள் புலம்புகிறார்கள். பஸ் ஸ்டாண்டில், கார் மற்றும் டெம்போ உள்ளிட்ட வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்திருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

இதன் காரணமாக சந்தைக்கு வரும் பொதுமக்கள், பயணிகள், விவசாயிகள் என பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்துள்ள கடை வியாபாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏக்கர் கணக்கில் காலியாக உள்ள சந்தையில் கடை வைக்க அறிவுரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.