கிருஷ்ணகிரி, நவ.2: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 33 மையங்களில் நடந்த குரூப் 2, 2ஏ தேர்வில் 2,056 பேர் தேர்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்விற்கான மையத்தை கலெக்டர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு 33 மையங்களில் நடந்தது. இத்தேர்வு பணிகளை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில், 6 பறக்கும் படை அலுவலர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள், 8 நடமாடும் அலகு அலுவலர்கள், 33 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 33 வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும், மின்சார வசதி, குடிநீர், கழிப்பிட வசதி, போலீஸ் பாதுகாப்பு ஏற்படுகள், போக்குவரத்து வசதி மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 9,438 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 7,382 பேர் தேர்வு எழுதினர். 2,056 பேர் தேர்வெழுதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது, தாசில்தார் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் நளினி ஆகியோர் உடன் இருந்தனர்.


