Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரியில் 188 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நலஉதவி: அமைச்சர் கீர்த்தனா வழங்கினார்

கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரியில், 188 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கீர்த்தனா, கெலவரப்பள்ளி அணையில் ரசாயன கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி எம்எல்ஏ முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பல்வேறு துறைகள் சார்பாக, 152 பயனாளிகளுக்கு ரூ.9.34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 16 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சத்தில் கலை விருதுகள் மற்றும் புதிய குடும்ப அட்டைகளை வழங்கி, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது: அரசாங்கத்தின் திட்டங்கள் பயனாளிகளுக்கு நேரடியாக சேர்வதை, நாங்கள் உறுதி செய்து வருகிறோம்.

குறிப்பாக, கிருஷ்ணகிரியில் 5,000 மெட்ரிக் டன் குளிர்பதனக் கிடங்கு, 2,500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்குடன் கூடிய உணவு பதப்படுத்தும் தொழிற்பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப் படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய நான்கையும் முதன்மை தூண்களாகக் கொண்டு, நமது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகள் ஏதும் நடக்காமல் தடுத்து, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக சிறப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். தென்பெண்ணை ஆற்றில் சுத்திகரிக்கப்படாமல் வரும் கழிவுநீர் பிரச்னைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் சுசிலாராணி, இணை இயக்குநர்கள் உமா, குணவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏஞ்சலின் பொன்ராணி, பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அனீசாராணி, சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் சங்கரராமன், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆனி பிரின்ஸி, பிஆர்ஓ மோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், வேளாண்மை அலுவலர்கள் அருள்தாஸ், பவித்ரா, மாவட்ட இசைப்பள்ளி முதல்வர் திரிவேணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.