கிருஷ்ணகிரி, அக்.30: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பண்டிகைக் காலங்களில் தனியார் மண்டபங்களில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை, கண்காட்சி நடத்துவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம், மாவட்ட அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் சங்கர் தலைமையில், நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, மீனாட்சிசுந்தரம், முனீர்அலிகான் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை குறி வைத்து, சிலர் தனியார் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, தற்காலிக கடைகள் வைக்கின்றனர்.
அங்கு ரெடிமேட் ஆடைகள், ஜவுளி ரகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை மொத்தமாக குவித்து ‘தள்ளுபடி விற்பனை கண்காட்சி’ என்கிற பெயரில், வெளியூர் வணிகர்கள் வியாபாரம் செய்கின்றனர். இதனால், பாரம்பரியமாக வணிகம் செய்யும் உள்ளூர் வணிகர்கள், பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே கடை வாடகை, மின்சார கட்டணம், பணியாளர்களுக்கான ஊதியம், வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே வணிகம் செய்து வருகிறோம்.
எனவே, உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரம், உள்ளூர் கடைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண மண்டபங்களில் பண்டிகைக் காலங்களில், தற்காலிகக் கடைகள் அமைத்து விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


