கிருஷ்ணகிரி, அக்.30: கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயில் டிரஸ்ட் தலைவர் குமரன், சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயில், 100 ஆண்டுகள் பழமையானது. தற்போது இக்கோயில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. பழைய கோயிலில் இருந்த கல் தூண்களை, இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து, ஒவ்வொரு தூண்களுக்கும் ஒரு பதிவு எண் தயார் செய்து, ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பது சட்டம்.
ஆனால், ஆகம விதிகளை கடைபிடிக்காமல் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த கல் தூண்கள் பொக்லைன் மூலம் உடைக்கப்பட்டு, குப்பையில் வீசப்பட்டுள்ளது. இந்த கல்தூண்கள் பழைய கோயிலின் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்பதால், அவற்றை முறையாக பாதுகாத்து, ஆவணப்படுத்தி நிபுணர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த கல்தூண்களை உடைத்து அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.


