Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

எண்ணேகொள் அணை கால்வாய் பணியை மேற்கொள்வதில் சிக்கல்

கிருஷ்ணகிரி: ரூ.274 கோடி மதிப்பில் எண்ணேகொள் அணை கால்வாய் அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள் அணைக்கட்டில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு வழங்கும் திட்டம் ஏற்படுத்தப் பட்டது. இதற்காக ரூ.274 கோடியில் 73.32 கி.மீ துரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் தொட்டிப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணேகொள் அணைக்கட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கிருஷ்ணகிரி அணைக்கு மேல்பகுதியில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டின் வலது புறத்தில், சுமார் 50.65 கி.மீ தொலைவிற்கும், இடதுபுறத்தில் 22.67 கி.மீ தொலைவிற்கும் என மொத்தம் 73.32 கி.மீ தொலைவிற்கு பிரதான கால்வாய்கள் மற்றும் தொட்டிப்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்திற்கு வலது புற கால்வாய்க்கு 207.59 மில்லியன் கனஅடியும், இடதுபுற கால்வாய்க்கு 161 மில்லியன் கனஅடியும் என மொத்தம் 368.59 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க ஏதுவாக, கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்ணேகொள் அணைக்கட்டின் வலது புற கால்வாய், பெல்லம்பள்ளி, கூலியம், செம்படமுத்தூர், அகரம், சோக்காடி, பெல்லாரம்பள்ளி, கத்தேரி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, பன்னிஅள்ளி மற்றும் கரடிஅள்ளி ஆகிய கிராமங்களின் வழியாக, தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணையை சென்றடைகிறது. இத்திட்டத்தில் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் அமைக்கும் பணி, தற்போது 51 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மொத்தம் 3,408 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த திட்டம் செயல்படுத்தினால், 29,942.05 மெட்ரிக் டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்ய முடியும்.

இதனிடையே, தற்போது இந்த பணி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கால்வாய் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில், அவர்களது வாரிசுதாரர்கள் தங்களுக்கு தான் அந்த நிலம் சொந்தம், எனவே கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீடு, தங்களுக்கு தான் வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர். நிலத்தின் பட்டா யார் பெயரில் உள்ளதோ, அவர்களுக்கு தான் இழப்பீடு வழங்க இயலும் என்ற நிலையில், தற்போது, இந்த பிரச்னை உருவெடுத்துள்ளது. இதனால், இந்த கால்வாய் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாயை நம்பியுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கண்டு, கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.