வேப்பனஹள்ளி, செப்.30: வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு, கிருஷ்ணகிரி நகரில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேப்பனஹள்ளியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நகர்புறத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனை, அரசு, தனியார் அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு சென்று வர அரசு நகர பேருந்துகளையே நம்பியுள்ளனர். ஆனால் சமீப காலமாக நகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளை, தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இயக்காமல், டிரிப் கட் செய்து இயக்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
அதன்படி நேற்று காலை கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனஹள்ளிக்கு காலை 10.45 மணி மற்றும் 11 மணியளவில் இயக்கப்படும் தடம் எண் 64 மற்றும் 11சி ஆகிய பேருந்துகள் போதிய பணியாளர்கள் இல்லாததால் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேருந்துகள் இல்லாமல் பயணிகள் சாலைகளில் காத்திருந்தனர். பின்னர் வந்த பேருந்தில் சிரமத்துடன் புறப்பட்டு சென்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நேரத்தில், கிராமப் புறங்களுக்கு அரசு நகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


