Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, அக்.29: 2026-2027ம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை, ஊக்கத் தொகை மற்றும் பாடநூல் உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

1972ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள். உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் பங்கு ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ.40 ஆக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி, நடப்பு 2026ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.1.2027க்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு வாரியத்தின் மூலம் உதவித் தொகை மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, கல்வி ஊக்கத் தொகை, பாடநூல் உதவித் தொகை, திருமண உதவி தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, மூக்கு கண்ணாடி உதவித்தொகை, தையல் இயந்திர உதவித்தொகை, அடிப்படை கணினி பயிற்சி உதவித் தொகை, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு உதவித்தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவி தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவி தொகைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதவி தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

2026-2027ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாடநூல் உதவி தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.lwb.tn.gov.in என்ற தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ‘‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-06” என்ற முகவரிக்கு 31.12.2026க்குள் அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும் என்றார்.