ஓசூர், அக்.29: 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஓசூர் மாநகருக்கு கூடுதலாக போலீசாரை நியமிக்கவும், போலீஸ் நிலையங்கள் அமைக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மாநகராட்சி அந்தஸ்தில் உள்ளது. இங்கு, தமிழகம் மற்றும் கர்நாடகம், ஆந்திரா மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக- கர்நாடக மாநில எல்லைப்பகுதிகளை கொண்ட இடமாக ஓசூர் விளங்குகிறது. மேலும், அதிக தொழிற்சாலைகள் உள்ளதால் தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நகரமாகவும் உள்ளது.
குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் பணிபுரிவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழிற்சாலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் அதிவேகத்தில் செல்கின்றனர். இவை எல்லாவற்றையும் கண்காணித்து போக்குவரத்தை சீர் செய்வது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது போன்ற பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஓசூர் மாநகர எல்லைக்குள் டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி, நல்லூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களும், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இதில் சிப்காட், மத்திகிரி ஒரு சர்க்கிளாக உள்ளது. இரு போலீஸ் நிலையங்களையும் ஒரே இன்ஸ்பெக்டர் தான் கவனித்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் அதிக குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடைபெறும் உட்கோட்டமாக ஓசூர் உட்கோட்டம் உள்ளது. குறிப்பாக ஓசூர் உட்கோட்டத்தில் உள்ள ஓசூர் மாநகரில் தான் அதிகளவில் கொலைகள், கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், ரவுடியிசம் என அனைத்தும் நடைபெறுகிறது. அத்துடன் மாநில எல்லை என்பதால் கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் மற்றும் குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் அதிகளவில் நடைபெறுகிறது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 526 ரவுடிகள் உள்ளனர். இதில் ஓசூர் பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். இத்தகைய ஓசூர் மாநகரில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற போலீஸ் நிலையங்கள் இல்லை. அதேபோல போலீசாரும் போதுமான அளவில் பணியில் இல்லை. நீதிமன்ற பணி, மருத்துவமனை பணி, பாதுகாப்பு பணி, சம்மன் வினியோகிக்கும் பணி என பல்வேறு பணிகளுக்கு செல்லும் போலீசார் போக, போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மிகவும் குறைவாகவே உள்ளனர். எனவே ஓசூர் மாநகருக்கு கூடுதல் போலீஸ் நிலையங்கள், கூடுதல் போலீசார் என்பது அவசியமாகி உள்ளது. இதற்காக கூடுதல் போலீஸ் நிலையங்கள், போலீசார் கேட்டு அரசுக்கு காவல்துறை சார்பில் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே ஓசூர் அட்கோ போலீஸ் நிலைய எல்லை பெரிதாக இருந்ததால், அதை பிரித்து நல்லூர் போலீஸ் நிலையம் சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டது. இப்போதும் ஓசூர் சிப்காட், டவுன் போலீஸ் நிலையங்களின் எல்லை அதிகமாக உள்ளது. எனவே, கூடுதல் போலீஸ் நிலையங்கள் விரைவில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல போலீசாரும் நியமிக்கப்படுவார்கள், என்றனர்.


