போச்சம்பள்ளி, செப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாசு(36), பூவரசன்(36) மற்றும் ஸ்டாலின்(28). மூவரும் நண்பர்கள். இவர்கள் கடந்த 25ம் தேதி, ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது, வாசு மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்டாலினை வெட்டினார். மேலும், அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து வாசு மற்றும் பூவரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


