எண்ணேக்கோல் திட்டப்பணிகள் 60 சதவீதம் நிறைவு கூடுதல் நிதி பெறுவதில் தாமதத்தால் நிலம் எடுப்பு பணிகள் தொய்வு விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி, செப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொள்புதூரில் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு வழியாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, வலது மற்றும் இடதுபுற கால்வாய் அமைத்து, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல எண்ணேக்கோல் கால்வாய் திட்ட செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அணைக்கட்டிலிருந்து வலதுபுறத்தில் சுமார் 50.65 கி.மீ இடதுபுறத்தில் சுமார் 22.675 கி.மீ தொலைவிற்கு பிரதான கால்வாய் வெட்டும் பணிகள், தொட்டி பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்திற்கு வலது புற கால்வாய்க்கு தேவையான 207.59 மில்லியன் கன அடியும் மற்றும் இடதுபுற கால்வாய்க்கு தேவையான 161 மில்லியன் கன அடியும் என மொத்தம் 368.59 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க ஏதுவாக கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வலது புறக்கால்வாய் மூலம் ஒரு அணை, 22 ஏரிகளும், இடதுபுறக்கால்வாய் 12 ஏரிகள் பாசன வசதி பெறும். இதன் மூலம் சுமார் 3500 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 9500 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பயன்பெறும். இவ்வாறான நிலையில் இத்திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த கூடுதல் நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் உள்ளதால், பணிகள் தொய்வாக நடைபெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், எண்ணேக்கோல் கால்வாய் திட்ட பணிகள் 7 ஆண்டுகள் கடந்தும் நடைபெற்று வருகிறது. தற்போது நிலம் கையகப்படுத்திட போதிய நிதி இல்லாததால் பணிகள் தொய்வாக நடைபெற்று வருகிறது.
இத்திட்டம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்டக்கால கோரிக்கையாகும். எனவே, தமிழக அரசு நிலம் கையகப்படுத்திட தேவையான கூடுதல் நிதியை உடனே ஒதுக்கி தந்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டபோது, எண்ணேக்கோல் கால்வாய் திட்டத்தின் கீழ் வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்கள் அமைக்க நிலம் கையகடுப்படுத்திட அரசு ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
தற்போது நிலங்கள் எடுக்க கூடுதல் நிதி கோரி, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி வரப்பெற்றவுடன், நிலம் எடுக்கும் பணிகள் தொடரும். மேலும், ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்கள் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றனர்.


