Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏரி அருகே குடிநீர் ஆதாரம் பாதிக்கும் வகையில் தனிநபர் வெட்டிய கிணற்றை மூடும் பணி துவங்கியது: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

தேன்கனிக்கோட்டை, ஜூலை 28: அஞ்செட்டி நளன்சக்கரவர்த்தி ஏரி அருகே, தனிநபர் கிணறு வெட்டுவதால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றை மூடும் பணியை துவங்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நளன்சக்கரவர்த்தி ஏரி பகுதியில், தனிநபர் பட்டா நிலத்தில் மிகப்பெரிய அளவில் கிணறு வெட்டி வந்தார். ஏரியை ஒட்டி கிணறு வெட்டி நீர் ஊற்றை மின்மோட்டார் மூலம் இறைத்து வருவதால், ஏரியில் தண்ணீர் வற்றி, குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நளன் சக்கரவர்த்தி ஏரியை கடந்த வருடம் தனியார் சிஎஸ்ஆர் நிதி மூலம் தூர்வாரி, அஞ்செட்டி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஏரியை சுற்றி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

ஏரியின் அருகே தனி நபர் பெரிய அளவில் கிணறு வெட்டுவதால், ஏரியில் தண்ணீர் வற்றி வருகிறது. இதுகுறித்து அஞ்செட்டி தாசில்தார், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு. அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் ஆதார மாக உள்ள ஏரியின் அருகே, கிணறு வெட்டுவதால் அஞ்செட்டி பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், கிணற்றை மூட நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று ஏரியின் அருகே வெட்டப்பட்ட கிணற்றை, பொக்லைன் இயந்திரம் மூலம் மண்கொட்டி மூடும் பணி நடைபெற்றது.