Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கிருஷ்ணகிரி-ஓசூர் என்.ஹெச்.ல் விபத்து, விதிமீறும் வாகனங்களை கண்காணிக்க கூடுதல் கேமராக்கள்: பொதுமக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, ஜூலை 28: கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்கவும், விதிமீறும் வாகனங்களை கண்காணிக்கவும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கன்னியாகுமரி-வாரணாசி (என்ஹெச் 7), கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை (என்ஹெச் 46), கிருஷ்ணகிரி-பாண்டிச்சேரி (என்ஹெச் 66), கிருஷ்ணகிரி-மதனப்பள்ளி (ஆந்திரா என்ஹெச் 219), ஓசூர்-சர்ஜாபுரம் (கர்நாடகா என்ஹெச் 207) என 5 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் மாவட்டமாக உள்ளது. இதனால் 24 மணி நேரமும், கிருஷ்ணகிரி மாவட்ட சாலைகள் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்த சாலைகளில் கிருஷ்ணகிரி-ஓசூர், பெங்களூரு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதேபோல், வட மாநிலங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி மற்றும் பிற ஊர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகமாக நடைபெறும் இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக சாலையை கடக்க கூடிய இடங்கள் என போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப் பள்ளி, கோபசந்திரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மேம்பாலங்கள் கட்டும் பணியினை நிறைவு செய்து, தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் 30 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் (60 கிலோ மீட்டர் தூரம்) கூடுதலாக கேமராக்களை பொருத்தி, வாகனங்களை கண்காணித்து, விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்ட போது, ‘கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை முழுவதையும் கண்காணிக்கும் வகையில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை, கிருஷ்ணகிரி டோல்கேட் வளாகத்தில் உள்ளன. தற்போது விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்காணித்து, கூடுதல் சிசிடிவி கேமராக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் கூடுதல் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் சென்ற தனியார் பேருந்து, மேலுமலை கணவாயில் சென்ற போது, எதிரில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, மறு திசைக்கு வந்து, பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே நடந்த மிகவும் கோரமான விபத்து இது தான்.

அதன் தொடர்ச்சியாக, அதே ஆண்டில் சாமல்பள்ளம் பகுதியில் தனியார் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் இறந்தனர். அதே போல், கடந்த 2014ம் ஆண்டு, அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் விபத்துகள் நடந்த சாலையாக கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. எனவே, இந்த சாலையில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, விபத்துக்களை தடுக்க, சாலை விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.