Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விளையாட்டு மைதானத்தில் விஷ ஜந்துகள் நடமாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 27: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானம், ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, உடற்பயிற்சி வளாகம், நீச்சல் குளம் போன்று அனைத்து வகையான விளையாட்டுகளும் கற்பிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான பள்ளி மாணவர்கள்இ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கி, பள்ளியில் படித்து கொண்டே விளையாட்டு பயிற்சி பெற்று, பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெரும்பாலானோர் தினமும் இந்த மைதானத்திற்கு வந்து உடற்பயிற்சி மேற்கொள்வதும், நடைபயிற்சி மேற்கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த மைதானத்தினை சுற்றியும் மரங்கள் வளர்க்கப்பட்டு, தற்போது நிழல் தரும் மரங்களாக, காற்று அதிகம் வீசும் இடமாகவும் உள்ளதால் இங்கு நடைபயிற்சி மேற்கொள்ள ஆர்வத்துடன் பலர் வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் குடும்பம், குடும்பமாக வந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், நடைபயிற்சி மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள பாதையினை சுற்றிலும், இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த இரும்பு கம்பியில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. அத்துடன் ஒரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளதால், கழிவுநீரும் தேங்கி, மழை காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், அவ்வாறு புதர்கள் உள்ள பகுதிகளில் இருந்து திடீரென பாம்புகள் நடைபாதைக்கு வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன.

அப்போது, நாய்களுக்குள் சண்டை வரும் போது நடைப்பயிற்சிக்கு வரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் பெரும் அச்சம் அடைகின்றனர். இது போன்ற அவல நிலை மாற, மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் கட்டிட வேண்டும். அப்போது தான் விஷ ஜந்துகள் வருவதும், நாய்கள் வருவதும் தடுக்க இயலும். அதற்கான நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கூறுகையில், `கிருஷ்ணகிரி நகரில் உள்ள பெரும்பாலானோர், குறிப்பாக முதியோர் மற்றும் பெண்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்ளும் நடைபாதை அருகில் உள்ள இரும்பு கம்பி வேலியில் அதிக அளவில் செடி,கொடிகள் படர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.

இதனால் விஷஜந்துகள் அதிகம் இந்த பகுதியில் உள்ளது. அத்துடன் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு வித அச்ச உணர்வோடு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மைதானத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். அதன் மூலம் விஷ ஜந்துகள் மற்றும் நாய்கள் வருவதை தடுக்க முடியும்,’ என்றனர்.