ஓசூர், அக்.23: ஓசூர், சூளகிரியில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் அவதியடைந்தனர். ஓசூர், சூளகிரி மற்றும் பாகலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. அதே போல், நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. பின்னர், அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, மாலை 3.30 மணியளவில் மிதமான மழை பெய்தது.
பின்னர், படிப்படியாக அதிகரித்து கனமழையாக பெய்தது. மழையின் காரணமாக ஓசூர், சூளகிரி, பாகலூர் சுற்றுவட்டார பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், சாலையோர வியாபாரிகளும் கடும் அவதியடைந்தனர்.


