ஓசூர், அக்.23: சூளகிரியில் தற்காலிக பட்டாசு கடைகளை சப் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவித விபத்துகளும் நேராமல் தடுக்கும் வகையில், சூளகிரியில் நேற்று சப்கலெக்டர் ஆக்ரிதி சேத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கடைகளில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு கருவிகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா?,
தீ விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் கடைகளுக்கு இடையே போதுமான இடைவெளி அமைக்கப்பட்டுள்ளதா? மற்றும் அரசு நிர்ணயித்த முறையான அனுமதி சான்றிதழ்களை வியாபாரிகள் பெற்றுள்ளார்களா என்பதை ஒவ்வொரு கடையாகச் சென்று ஆய்வு செய்தார்.அப்போது வியாபாரிகளிடம் பேசிய அவர், அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் வியாபாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீதும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.


