Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம்; மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் குப்பைகள்: இறைச்சி கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் புனித பயணம் மேற்கொண்டு நீராடி செல்வதால், இங்கு குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அருகேயுள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் புகழ் பெற்ற மாதேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி - தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, மத்தூர், ஊத்தங்கரை, தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, கம்பைநல்லூர், அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு தரிசனத்துக்கு வருபவர்கள் தென்பெண்ணை ஆற்றில் குளித்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

உயிரிழந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்கின்றனர். வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்தும், சபரி மலை, பழனி மலை மற்றும் மேல் மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் என மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுக்கு அதிகளவில் பக்தர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இவ்வாறான நிலையில், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில், கரையோரம் மர்ம நபர்கள் சிலர் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், ஓட்டல் கடைகளின் உணவு கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டுவந்து இரவு நேரங்களில் ஆற்றுக்குள் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், ஆற்றில் குளிக்க வரும் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக ஆற்றுநீர் மாசு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் உள்ள கோயிலுக்கு விழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய விஷேச நாட்களில் 500க்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். ஆற்றுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் புனித நீராடி விட்டு செல்வது வழக்கம். அத்துடன் ஈமச்சடங்கு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை ஓட்டி, கரையோரம் சிலர் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டிச் செல்கின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து, ஆறுக்கு வருவதால், நீர்மாசடைகிறது. மேலும், அப்போது புனித நீராடும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.

இதேபோல், இறைச்சி கழிவுகளை பறவைகள், நாய்கள் இழுத்து கொண்டு சென்று ஆற்றில் விட்டு விடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்விடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அதை கண்காணித்து, கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், இந்த பகுதியினை ஊராட்சி நிர்வாகம் எப்போதும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.