Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஆடு மற்றும் மாட்டுச் சந்தை நடப்பது வழக்கம். இச்சந்தைக்கு ஆடுகள் மற்றும் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று நடந்த சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த 10,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் உள்ளதால், நேற்று நடந்த சந்தைக்கு வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் குறைவாக வந்திருந்தனர். இதனால், ஆடுகள் விற்பனை டல்லாக இருந்தது. இதனால், 3,000 ஆடுகள் மட்டுமே விற்பனையானது. 25 கிலோ கொண்ட ஒரு பெட்டை ஆடு ரூ.20 ஆயிரத்திற்கும், கிடா ஆடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. இதற்கு முன்பு ரூ.8 கோடி வரை ஆடுகள் விற்பனையாகி வந்த நிலையில், இந்த ஆண்டு ஆட்டின் விலை உயர்ந்துள்ளதால், நேற்று ரூ.2.50 கோடிக்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானது. இதனால் விவசாயிகள் பலர் ஏமாற்றத்துடன் ஆடுகளுடன் வீடு திரும்பினர்.