Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாவட்டம் முழுவதும் கனமழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புவிவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி, செப்.21: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்ததால், தென்பெண்ணையில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் தொழில் பிரதானமாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக போதிய மழை இல்லாததால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுபோனது.

இதனால் விவசாயிகள் அண்டைய மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் நிலக்கடலை பயிரை சாகுபடி செய்தனர். மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அருகே உள்ள கேஆர்பி அணை, ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை ஆகியவற்றில் ஓரளவிற்கு தண்ணீர் இருந்தும், சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. பெரும்பாலான ஏரிகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக எண்ணேகொள் ஏரி கால்வாய் திட்டம் நீண்ட நாட்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 15ம் தேதி இரவு, பல்வேறு பகுதியில் பெய்த மழை 449.50 மி.மீ., பதிவானது. இதனால் பூமி குளிர்ச்சி அடைந்து, குளிர்ந்த காற்று வீசியது. நேற்று முன்தினம் இரவு, சுமார் 8 மணி முதல் விடிய, விடிய மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 60.80 மி.மீ மழை பதிவாகியிருந்தது. இதேபோல், ஊத்தங்கரை -55.60, ராயக்கோட்டை -55, ஓசூர் -52, தேன்கனிக்கோட்டை -48, கே.ஆர்.பி. டேம் -45.40, பாம்பாறு டேம் -44, நெடுங்கல் -36.20, கெலவரப்பள்ளி டேம் -35, பாரூர் -35, பெனுகொண்டாபுரம் -33.20, தளி -25, சூளகிரி -22, சின்னாறு டேம் -20, போச்சம்பள்ளி -18, அஞ்செட்டி- 10 என மொத்தம் 595.20 மி.மீ., மழை பதிவாயிருந்தது. இவ்வாண்டு பெய்த மழை அளவில் இது தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 440 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 692 கனஅடியானது. இதனால், அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 47.05 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 162 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழையால் கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் உள்ள நகர பேருந்து நிலையம், ஆவின் மேம்பாலம், கிருஷ்ணகிரி -சேலம் செல்லும் சாலையில் அருகில் உள்ள சர்வீஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தரைப்பாலம் மூழ்கியதால் அவதி

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழையால் தென்பெண்ணையில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ராயக்கோட்டை அருகே பண்டப்பள்ளியில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால், பண்டப்பள்ளி கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு சென்று திரும்பிய மக்கள் ஊருக்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இந்த தரைப்பாலம் வழியாக கூலியம், உலகம், பந்தர்பட்டி, தொட்டமெட்டரை போன்ற பகுதிகளுக்கு டூவீலர்களில் செல்ல முடியாததால், ராயக்கோட்டையை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வார விடுமுறையையொட்டி பண்டப்பள்ளி ஆற்றங்கரையோரம் உள்ள சிவன் கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், கோயிலுக்கு செல்ல வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது.