Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ரோஜா சாகுபடியை பாதுகாக்க 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

ஓசூர், ஜூலை 21: ஓசூர் பகுதியில், ரோஜா பூக்கள் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க 125 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்களை, விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சீரான தட்பவெப்ப நிலை நிலவுவதால், 400 ஆண்டுகளுக்கும் மேலாக ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது விவசாய பணிக்கு போதுமான ஆட்கள் இல்லாததால், பல ரோஜா தோட்டங்கள் வாடி கிடக்கிறது. இதனால், ரோஜா பூக்கள் சாகுபடி சிறுக, சிறுக அழிந்து வருகிறது. ரோஜா பூக்களின் தாயகமாக ஆசியா திகழ்கிறது. உலகில் 100க்கும் அதிகமான வகைகளில் ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா சாகுபடி நடக்கிறது. குறிப்பாக தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட், அவலாஞ்சி, நோப்லஸ், கார்வெட், கோல்ட் ஸ்டிரைக் போன்ற ரோஜாக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விளையும் ரோஜாக்களை, உள்நாட்டு தேவைக்கு போக, வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனிடையே, பசுமைக்குடில்களை பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், இப்பகுதிகளில் ரோஜா மலர் சாகுபடி பரப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்நிலை நீடித்தால், வருங்காலத்தில் ஓசூர் பகுதியில் ரோஜா சாகுபடி பெயரளவுக்கு மட்டுமே நடக்கும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க, விவசாய பணிகளில் 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து, ஓசூரில் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் பரப்பளவில், ரோஜா மலர்களை சாகுபடி செய்ய, பசுமை பண்ணை அமைக்க ரூ.65 லட்சம் வரை செலவாகிறது. கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றினால், பல பசுமை குடில்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்கவே பல லட்சம் தேவைப்படும். ஒரு ஏக்கரில் ரோஜா செடிகளை நடவு செய்வதற்கு சுமார் ரூ.10 லட்சம் வரை செலவாகிறது. கர்நாடக மாநிலத்தில், ரோஜா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் 80 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்திலும் வழங்க வேண்டும். அவ்வாறு மானியம் வழங்கினால், ரோஜா சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், வேலை வாய்ப்பு பெருகும். ஒரு வருடத்திற்கு சுமார் ரூ.2,500 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை ஓசூர் பகுதியில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஓசூர் பகுதியில் உள்ள பசுமை குடில்களில், பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள் தான் வேலை செய்கின்றனர். இவர்கள் விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களின் போது, குடும்பத்தோடு தங்களது சொந்த ஊருக்குச் சென்று விடுவார்கள். அப்போது, ரோஜா சாகுபடி பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 125 நாள் வேலை திட்டத்தில், பணிபுரியும் தொழிலாளர்களை, ரோஜா சாகுபடி செய்யும் பசுமை குடில்களுக்கு வேலைக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் ேபாது, அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். தொழிலாளர்களுக்கு மாதம் சுமார் ரூ.18,000 வரை ஊதியமும் கிடைக்கும். மேலும், இதன் மூலம் தமிழக அரசுக்கும் செலவினம் குறையும். எனவே, தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்

தெரிவித்தனர்.