Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஓராண்டில் 20 பேர் பலி; விபத்துகள், போக்குவரத்து நெரிசலை தடுக்க பறக்கும் பாலம் கட்ட வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜூலை 20: கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க பறக்கும் பாலம் விரைந்து அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரியில், ஆவின் மேம்பாலம் அருகில் பெங்களூரு -சென்னை, சேலம் - சென்னை, சேலம் - பெங்களூரு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இதில் சேலம் -பெங்களூருவுக்கு செல்லும் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. ஆனால், சேலத்திலிருந்தும், பெங்களூருவில் இருந்தும் சென்னைக்கு செல்பவர்கள் இதே சாலையில் ஆவின் மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் நிலை உள்ளது. இதனால் நான்கு புறத்திலிருந்தும் வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நாள்தோறும் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதை தவிர்க்க, பெங்களூரு, சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு, தனியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும், சேலம் - பெங்களூரு சாலையில், ஆவின் மேம்பாலத்திற்கு மேல் பறக்கும் மேம்பாலம் போல் அமைக்க வேண்டும். இதன் மூலம் சென்னைக்கு செல்பவர்களும், வருபவர்களும் சிரமமின்றி செல்லாம். சேலம் -பெங்களூரு மார்க்கத்தில் செல்பவர்கள், மேம்பாலத்திலும் நகருக்குள் சென்று வருபவர்கள், மேம்பாலத்தின் கீழும் சென்று வர முடியும். இது குறித்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை, டில்லியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆவின் மேம்பாலத்தில் ஆய்வுகளை துவக்கி உள்ளனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், `கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில், சேலம்-பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்லும் வகையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் சாத்திய கூறுகள், இடங்கள் குறித்து ஆய்வை துவக்கி உள்ளோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும், இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ரூ.1,000 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது இத்திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, அதிகாரிகள் குழு ஆய்வை முடித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட மதிப்பீடு கருத்துருவுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உடனடி ஒப்புதல் வழங்கினால், விரைவில் பணிகள் துவங்கும்,’ என்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒவ்வொரு பாலங்கள் வந்ததிற்கும் ஒரு விபத்து காரணமாக அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில், காட்டு வீரஆஞ்சநேயர் கோயில் அருகில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி அன்றைய கிருஷ்ணகிரி கலெக்டர் பூஜா குல்கர்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ் திடீரென்று நின்றதால் கலெக்டர் சென்ற கார் பஸ்சின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் கலெக்டரின் டபேதார் முனிராஜ் உயிரிழந்தார். கலெக்டர், அவரது நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். அந்த சம்பவம் பின்னரே அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது.இதே போல மேலுமலை பகுதியில், 2016ம் ஆண்டு நடந்த விபத்தில் 20 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கு வேகத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி பகுதிகளில் விபத்து நடக்கும் இடங்களில் தற்போது பாலங்கள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி, கந்திகுப்பத்தில் போட்டி போட்டு வந்த 2 கார்கள் சாலையில் சென்ற டூவீலர், மொபட், சைக்கிள் மீது மோதி 4 பேர் இறந்தனர். இதனால் பெரும் வன்முறை ஏற்பட்டது. அங்கு தொடர்ந்து விபத்துகள் நடந்ததால், தற்போது கந்திகுப்பத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகிலும் தொடர் விபத்துகள் நடப்பதால், தற்போது பாலம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக, அதிகாரிகள் ஆய்வை தொடங்க உள்ளனர். விரைவில் ஆய்வை மேற்கொண்டு, பறக்கும் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.