Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் மா விலை நிர்ணயம் குறித்து முத்தரப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரியில் மா விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முத்தரப்பு கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மா விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முத்தரப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: நிகழாண்டில் கடும் வெயில் காரணமாக, மா மகசூல் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மா மரங்கள் பராமரிப்பில் தொடங்கி, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பு, கூலி உயர்வால் ஒரு கிலோ மாங்காய்க்கு ரூ.14 வரை உற்பத்தி செலவாகிறது. மாங்காய்கள் அறுவடை செய்து மண்டிகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு கிலோ ஒன்றுக்கு ரூ.4 வரை ஆகிறது. இதனால் மாவிற்கான குறைந்தபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.25 விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.

மேலும், கிலோவுக்கு மானியமாக ரூ.5 வழங்க அரசு முன்வர வேண்டும். இதேபோல், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், பராமரிப்பு, அறுவடைக்கு தேவையான உபகரணங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினால், உற்பத்தி செலவு குறையும். வெளிமாநிலங்களில் இருந்து மாங்காய்களை கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும். 2025ம் ஆண்டு மா விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் சந்தை இழப்பீடு திட்டத்தில் 2.47 லட்சம் டன் மாங்கனிகளுக்கு ரூ.92 கோடி நிவாரணம் வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை, இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக மாங்கனிகள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

அதை தொடர்ந்து, மாங்கூழ் உற்பத்தியாளர்கள் பேசியதாவது: மாவட்டத்தில் 24 மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மாங்கூழ் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மாம்பழ நுகர்வு குறைந்துள்ளதால், 2 லட்சம் டன் மாங்கூழ் தேக்கமடைந்துள்ளது. மா கொள்முதல் விலையை நாங்கள் மட்டும் நிர்ணயம் செய்வதில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து தான், விலையை நிர்ணயம் செய்கிறோம். வளைகுடா நாடுகளில் மாங்கூழ் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொள்முதல் செய்யப்பட்ட மாங்கூழ் தேக்கம் அடைந்துள்ளது. போக்குவரத்து கப்பல் கட்டணமும் உயர்ந்துள்ளது. 1000 விவசாயிகளின் பிரச்னைகள், ஒரு மாங்கூழ் உற்பத்தியாளர் மீது திணிக்கப்படுகிறது. 8 லட்சம் டன் மாங்கூழ் தயாரிக்க, 16 லட்சம் டன் மாங்காய்கள் கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்திய அளவில் மாங்கூழ் பயன்பாட்டை அதிகரிக்க, ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ குளிர்பானத்தில் மாங்கூழ் 16 சதவீதம் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு மா கொள்முதல் செய்ய, கிலோ ஒன்றுக்கு ரூ.2 மானியம், மின்கட்டணம், ஜிஎஸ்டி ரத்து, வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: மாவட்டத்தில், மா மகசூல் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். மாவட்டத்தில் உள்ள 24 மாங்கூழ் தொழிற்சாலைகளில் 3 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாவிற்கான குறைந்தபட்ச விலையாக ரூ.15க்கு மேல் தருவதற்கு உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். மாங்கூழ் தொழிற்சாலைகளில், உயர் மற்றும் குறைந்த மின் அழுத்த பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். விவசாயிகள், உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். வரும் ஜூன் மாதம் 2வது வாரத்தில், முத்தரப்பு கூட்டம் நடைபெறும். உள்ளூர் விவசாயிகளிடம் மா கொள்முதலை முழுமையாக முடித்து விட்டு, தொடர்ந்து வெளி மாவட்டம், மாநிலங்களில் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.இந்த கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், மா விவசாயிகள், மாம்பழக்கூழ் தொழிற்சாலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.