Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்து கடைகளுக்கு மது விற்றால் டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, மே 19: காவேரிப்பட்டணத்தில் சந்து கடைகளுக்கு மதுபாட்டில் விற்பனை செய்தால், டாஸ்மாக் ஊழியர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள காவல் நிலையத்தில், நேற்று டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். எஸ்.ஐ.க்கள் அறிவழகன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் கூறியதாவது: டாஸ்மாக் கடையை இரவு 10 மணிக்குள் சரியாக மூடவேண்டும். இதற்கான ஆயத்தப் பணிகளை இரவு 9.45 மணிக்கே தொடங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு செயல்படுவதை ஊழியர்கள் அனுமதிக்க கூடாது. மேலும், கடைகளுக்கு வெளியே, அனுமதியின்றி மது விற்பனை நடைபெறாமல் தடுக்க ஊழியர்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிகளவில் மதுபாட்டில்கள் வாங்குபவர்களின் செல்போன், முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். சந்து கடைகளில் மது விற்பனை செய்வதை கண்டறிந்தால், மதுபாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ, மதுபாட்டில்கள் கேட்டு மிரட்டினாலோ, உடனே போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

மேலும், விதிகளை மீறி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் தனிப்பிரிவு ஏட்டு நவீத்பாஷா மற்றும் 7 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.