Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ரூ.1.45 கோடியில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, செப்.18: கிருஷ்ணகிரியில் ரூ.1.45 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரியில் புதுப்பேட்டை, பழையபேட்டை, லண்டன்பேட்டை, பாப்பாரப்பட்டி, செட்டியம்பட்டி, நகரை ஒட்டியுள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக, பழையபேட்டை நேதாஜி சாலை, திருவண்ணாமலை சாலையில் கணபதிநகர், பாப்பாரப்பட்டி ஏரி அருகே, லைன்கொல்லை, தேவசமுத்திரம் செல்லும் வழி உள்ளிட்ட பகுதிகளில் சுடுகாடு உள்ளது. அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களை புதைத்து வந்தனர்.

இதனிடையே, நகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சாலையில் உள்ள கணபதிநகரில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப் பட்டு பயன்பாட்டில் உள்ளது. பழையபேட்டை நேதாஜிசாலையில் உள்ள சுடுகாடு பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால், இறந்தவர்களை எரிக்கும்போது, பெரிய அளவில் புகை மற்றும் தூசு பரவி வருவதாக, அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த 2022-2023ம் நிதியாண்டில், ரூ.1.45 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், புதிய நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து, 3 ஆண்டுகள் கடந்தும், இதுவரை இந்த நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் இறந்தவர்களை வெளியில் வைத்தே எரிப்பதால், புகை பரவி வருவதாக மீண்டும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பழையபேட்டையை சேர்ந்த கமலகண்ணன் என்பவர் கூறுகையில், `இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நவீன எரிவாயு தகன மேடை அமைத்தனர். ஆனால், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் அரசின் பணம் வீணாகி வருவதோடு, தற்போது எரிவாயு தகனமேடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி யுள்ளது. இங்கு சமூக விரோதிகள் மது, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதோடு, தகன மேடை கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, மின்சாதனப் பொருட்களை சேதப்படுத்தி, மின் ஒயர் மற்றும் மின்விளக்குகளை திருடிச் சென்றுள்ளனர். எனவே, மக்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த நவீன எரிவாயு தகன மேடையை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,’ என்றார்.