போச்சம்பள்ளி, ஆக.18: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் நிலவும் சீதோஷ்ண நிலையை அடிப்படையாக கொண்டு, சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தியும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி மற்றும் கீரை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சூளகிரி வட்டத்தில் உள்ள 42 ஊராட்சி பகுதியில் கொத்தமல்லி தழை சாகுபடி பிரதாமான இருந்து வருகிறது.
கொத்தமல்லிக்கு ஆண்டு முழுவதும் தேவை இருப்பதோடு, சூளகிரியில் கொத்தமலை தழை விற்பனைக்கு என சந்தை உள்ளதால், விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களான வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் கொத்தமல்லி சூளகிரி சந்தை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா கேரளா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சூளகிரி சந்தையிலிருந்து தினசரி ஒரு டன் கொத்தமல்லி வெளியிடங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.



