கிருஷ்ணகிரி, ஆக.18: அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட போதிலும், தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளதோடு, பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கட்டுமான தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளை கொண்ட மாவட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. அதிகளவில் வனப்பகுதிகளும், மலை பகுதிகளும் கொண்ட மாவட்டம் என்பதால், இங்கு உலக தரம் வாய்ந்த கிரானைட் கற்கள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் போன்றவை, நாள்தோறும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திரா மாநிலம் கோலார் பகுதிகளுக்கு சுமார் 10 ஆயிரம் டன் அளவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதுதவிர, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற உள்ளூர் பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200 டன் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



