Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டோல்கேட் அருகே விதிகளை மீறி நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்

கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, விதிகளை மீறி நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பிரதான போக்குவரத்து கேந்திரமாக விளங்கி வருகிறது. கன்னியாகுமரி-வாரணாசி, கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி-பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி -மதனப்பள்ளி(ஆந்திரா) என 4 தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் நகரமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள், கிருஷ்ணகிரி வழியாக தான் செல்கின்றன. அதேபோல், வடமாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரிக்கு வரும் வாகனங்கள் கிருஷ்ணகிரி வழியாக தான் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் கிருஷ்ணகிரி நகரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் தீராத பிரச்னையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த டோல்கேட் அருகே, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் இந்த அலுவலகங்களுக்கு சென்று வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் டோல்கேட்டை கடந்து தான், தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த டோல்கேட்டை கடந்து செல்லும் கனரக வாகனங்கள், பெரும்பாலும் டோல்கேட் அருகே விதிகளை மீறி நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

அவ்வாறு நிறுத்தும் கனரக வாகன ஓட்டிகள், எவ்வித சிக்னலும் கொடுக்காமல் திடீரென வாகனங்களை வலது புறம் திருப்பி இயக்குவதால், வழக்கமாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, அந்த கனரக வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், வாகனங்களை நிறுத்த காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், `கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே அதிகளவில் லாரிகளை நிறுத்துகின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் லாரிகளை திடீரென எடுத்து, வலது புறம் திருப்புகின்றனர்.

அப்போது, அவ்வழியே வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், அந்த லாரிகள் மீது மோதி விபத்திற்குள்ளாகும் நிலை தொடர்கதையாக உள்ளது. எனவே, லாரிகள் நிறுத்துவதற்கென தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் லாரிகளை நிறுத்தி, அதன் ஓட்டுனர்கள் ஓய்வு எடுக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், அந்த இடங்களில் அந்த லாரி ஓட்டுனர்களுக்கு கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதன் மூலம், டோல்கேட் அருகே லாரிகளை நிறுத்துவது தடுக்கப்படுவதுடன், விபத்துகள் ஏற்படுவதையும் தடுக்க முடியும்,’ என்றனர்.