கிருஷ்ணகிரி, அக்.17: காவேரிப்பட்டணத்தில் 30 கிலோ கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்து, ஒருவரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில், கஞ்சாவை பதுக்கி விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், அவர்களை கடந்த சில தினங்களாக கண்காணித்து வந்தனர். சம்பந்தப்பட்ட நபர்கள் கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரிக்கு அடிக்கடி டூவீலர்களில் சென்று வருவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவேரிப்பட்டணம் அடுத்த காவாப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(32), என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில், வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மூட்டைகளில் பதுக்கி சுற்றுவட்டார பகுதிகளில் விற்றதை ஒப்புக்கொண்டார். இவர், துவாரகாபுரி செல்வராஜ்(19), காவேரிப்பட்டணம் நந்தகுமார்(25), ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்காக, செல்வராஜ் தான் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்தில் வேலையை விட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்குமார், செல்வராஜை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 30.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தப்பியோடிய நந்தகுமாரை தேடி வருகின்றனர்.


