Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணை ஆற்றை மாசுபடுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, அக்.17: காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலந்து, தண்ணீர் மாசடைவதை தடுக்க, இங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தொழில் வளர்ச்சியில் சிறந்த சிறு நகரமாக உள்ளது. இந்த நகரை குட்டி சிவகாசி என்றழைக்கும் வகையில், இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நகரில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள், நிப்பட் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பால்கோவா தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மேலும், இந்த பேரூராட்சி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும், நகரை ஒட்டியுள்ள தென்பெண்ணை ஆற்றில் நேரடியாக கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மாசடைந்து காணப்படுகிறது. இதனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஓடும் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவும், குடிநீராகவும், கோயில்களில் புனித நீராடவும் கட்டப்பட்ட படித்துறை, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: காவேரிப்பட்டணம் பேரூராட்சி மற்றும் எர்ரஅள்ளி, திம்மாபுரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 2 கி.மீ தூரம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சிதிலமடைந்து காணப்படுகிறது. இதேபோல், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய கடந்த 2013ம் ஆண்டு பல லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், தொடங்கிய சில ஆண்டுகளிலேயே முறையான பராமரிப்பு இல்லாமல், இந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது. இதனால் தற்போது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மோட்டார் இயந்திரங்கள், குழாய்கள் அனைத்தும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு திருடி செல்லப்பட்டு விட்டது.

இதன் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும், அப்படியே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆறு முழுவதும் கழிவுநீர் கலந்து மாசடைந்து விட்டது. இந்த நீரை குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த முடியாமல் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீரை முறையாக கொண்டு சென்று அப்புறப்படுத்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும், சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, தென்பெண்ணை ஆறு மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.