ராயக்கோட்டை, செப்.17: ராயக்கோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராயக்கோட்டையை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், தாங்கள் சாகுபடி செய்த தக்காளி, காய்கறிகள், பூக்கள், தானியங்கள் போன்றவற்றை விற்பனை செய்யவும் டிராக்டர், டெம்போ வாகனங்கள், டூவீலர்கள் போன்றவற்றில் கொண்டு வருகின்றனர். அந்த வாகனங்களை கிருஷ்ணகிரி ரோடு, தர்மபுரி ரோடு, ஓசூர் ரோட்டிலுள்ள பூ மார்க்கெட் சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். அவர்கள் திரும்ப வந்து எடுத்து செல்லும் வரை, வாகனங்கள் அங்கேயே நிற்கின்றன. இந்த சாலைகளில் ஏராளமான பஸ்கள், லாரிகள், கார்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் சென்று வருவதால், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, வாகனங்களை நிறுத்த மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து, சந்தையில் சுங்க வரி வசூலிப்பதை போல வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்தால் ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கும், வாகனங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். எனவே, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


