ஓசூர், செப்.17: சூளகிரி அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.சூளகிரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று, சென்னப்பள்ளியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார், கிரேன் உதவியுடன் சாலையில் குறுக்கே கவிழ்ந்த கன்டெய்னர் லாரியை மீட்டு ஓரமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு, வாகனங்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.


