தேன்கனிக்கோட்டை, ஆக.17: தேன்கனிக்கோட்டை அருகே, சாமந்தி தோட்டத்தை யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சகரம் நொகனூர் வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அந்த யானைகள் அவ்வப்போது இரண்டு யானைகள், மூன்று யானைகள் என பிரிந்து, கிராம பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி சுற்றி வருகின்றன. நொகனூர், மரகட்டா, கிரியனப்பள்ளி, கொதூர், ஏணிமுச்சந்திரம், ஆலல்லி, தாவரகரை, கேரட்டி, கெண்டகானபள்ளி கிராமங்களில் தினமும் சுற்றி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நொகனூர் பகுதியில் சுற்றி திரிந்த 2 யானைகள் அப்பகுதியில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், சாமந்தி தோட்டங்களை சேதப்படுத்தி உள்ளன.
மேலும் சொட்டூநீர் பாசன கருவி, பைப்புகளை மிதித்து நாசம் செய்துள்ளன. அறுவடைக்கு தயாராக உள்ள சாமந்தி தோட்டத்தை மிதித்து சென்றுள்ளன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கிராம பகுதிகளில் சுற்றி திரியும் யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், சேதமடைந்த தோட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




