Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

போச்சம்பள்ளியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு: டன் ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனை

போச்சம்பள்ளி, ஜூலை 16: வெளி மாநில தேவை அதிகரிப்பால், போச்சம்பள்ளியில் உள்ள மண்டிகளில் தேங்காய் விலை உயர்ந்தது. நேற்று தேங்காய் டன் ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னந்தோப்புகள் உள்ளன. இந்த தோப்புகளில் ஆண்டுக்கு சுமார் 5 கோடி தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை தொழிலை நம்பி சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இங்கு விளையும் தேங்காய்கள் சென்னை, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தேங்காய் விலை வரலாறு காணாத அளவிற்கு குறைந்தது.

கடந்த மாதம் ஒரு டன் ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள மண்டிகளில் மலை போல் தேங்காய் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மரத்தில் இருந்து பறித்த தேங்காய்கள் 2 மாதங்கள் வரை தாக்கு பிடிக்கும் என்பதால், தார்பாய் கொண்டு மூடி வைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தேங்காய்க்கு திடீரென மவுசு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மண்டிகளில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள், தற்போது வெளிமாநிலங்களுக்கு லோடு ஏற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து தேங்காய் விவசாயி பாலேகுளி முருகேசன் கூறுகையில், `கடந்த மாதங்களில் ஒரு டன் தேங்காய் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெளி மாநிலத்தில் தேங்காய் தேவை அதிகரித்துள்ளதால், ஒரு டன் தேங்காய் ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது,’ என்றார். விவசாய சங்க தலைவர் எருமாம்பட்டி மணி கூறுகையில், `போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால், இளநீர் தேவை அதிகரித்துள்ளது. தேங்காய் விலை உயர்ந்துள்ள நிலையில், இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது,’ என்றார்.