Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பழமைவாய்ந்த பொருட்களுடன் ஆஸ்பெட்டாஸ் ஷீட் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அருங்காட்சியகம்: பாதுகாப்பிற்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரியில், 33 ஆண்டுகளாக ஆஸ்பெட்டாஸ் ஷீட் கொண்ட கட்டிடத்தில், பாதுகாப்பின்றி செயல் பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தை, பாதுகாப்பான நிரந்தர கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி காந்தி சாலையில், மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 2 ஆண்டுகள் ஊழியர்கள் சேகரித்த அரியவகை வரலாற்று பொருட்களுடன் கடந்த, 1993ல் மாவட்ட அரசு அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இங்கு உயிரியல், தாவரவியல், மண்ணியல், தொல்லியல், கல்மாறி மண்ணியல் பொருட்கள், சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வரலாற்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்தில், பல பொருட்கள் இருந்தாலும், இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட நடுகற்கள் பல்வேறு கலாச்சார முறைகளை உணர்த்தும் விதமாக உள்ளன.

குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின், அகரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏறுதழுவுதல் நடுகல்லை அடிப்படையாக வைத்தே, மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதே போல செல்லகுட்டப்பட்டி கிராமத்திலும் ஒரு ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய கற்காலம் தொடங்கி, புதிய கற்காலம், பெருங்கற்படைக்காலம் மற்றும் வரலாற்று காலம் வரையிலும் புஜ்ஜகொண்டபுதூர் மற்றும் ஓசூரில் இருந்து கி.பி.,18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பீரங்கிகள் கொண்டு வந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிச்சுவா கத்தி, உறையுடன் கத்தி, பீரங்கி கற்குண்டுகள், மருந்து துப்பாக்கி ஆகியவையும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2018 முதல் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவோடு இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியினர் பல்வேறு பண்டைய வரலாற்று அரியவகை பொருட்களை கண்டெடுத்துள்ளனர். ஆனால் இந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க அருங்காட்சியத்திற்கு சொந்த இடம் இல்லை. ஆஸ்பெட்டாஸ் ஷீட் போடப்பட்ட, ஊரக வளர்ச்சி முகமைக்கு சொந்தமான கட்டடத்தில் தான் இயங்கி வருகிறது. இங்கு பொருட்களை நவீன வகையில் காட்சிப்படுத்தவோ, இங்குள்ள அரங்குகளில், 50 பேருக்கு மேல் நின்று பார்க்க கூட முடியாத சூழல் உள்ளது. மேலும் அருங்காட்சியகத்தின் அருகில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதும், அருகிலேயே ஐந்துரோடு சாலை பிரிவு இருப்பதும் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களின் பாதுகாப்புக்கும், திருடு போவதற்கும் வழிவகுக்கும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பண்டைய வாழ்க்கை முறை, கலாச்சாரத்தை விளக்கும் இப்பொருட்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அருகிலோ அல்லது நகரின் முக்கிய இடத்திலோ, அரசு அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்பது அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறு தனியாக கட்டிடம் கட்டினால் அருங்காட்சியக பொருட்களை நவீன முறையில் காட்சிப்படுத்தப்படுவதுடன், 500க்கும் மேற்பட்டோர் நின்று பார்க்கும் வகையில் அரங்குகள் அமைக்க முடியும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலமாக உள்ள அணைப்பகுதியில் அருங்காட்சியம் அமைந்தால், வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்படுவதோடு, மாவட்டத்தின் பண்டைய வரலாற்றுச் சுவடுகளை அனைவரும் தெரிந்து கொள்ளவும் முடியும் எனவும் கூறுகின்றனர். இதற்கான நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.